Friday, March 30, 2007

புண்ணியம் செய்தனமே மனமே (பாடல் 41)



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா. என்ன பாக்கியம். என்ன பாக்கியம். புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே.

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி - இப்போதே மலர்ந்த கருங்குவளைப்பூவைப் போன்ற கண்களை உடைய நம் அன்னையும் சிவந்த அவளது கணவரும் இணைந்து

நம் காரணத்தால் நண்ணி - நம்மை ஆண்டு அருள்வதற்காக விரும்பி

இங்கே வந்து - நாமிருக்கும் இடமான இங்கே வந்து

தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி - தம் அடியவர்களின் கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி அருள் செய்து

நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே - நம் தலையின் மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை நிலையாக நிறுத்திடவே.

***

அம்மையும் அப்பனுமாக இணைந்து இருப்பதே நிலையானது. அதுவே அருள் செய்யும் நிலை. இதனை புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி என்று சொல்கிறார்.

அம்மையின் அடியவர் என்பதால் அம்மையை முன்னிலைப் படுத்தி அவளின் கணவர் என்று பெருமானைச் சொல்கிறார். என்னை அறிந்தவர்கள் என் தந்தையைக் குமரனின் தந்தை என்பதும் என் தந்தையை அறிந்தவர்கள் என்னை நடராஜன் மகன் என்பதும் போல.

தாமே நமக்காக விரும்பி வந்தார்கள் என்பது நாம் செய்த ஏதோ ஒரு நல்வினைக்காக என்று இல்லாது அவர்களின் கருணையாலே நமக்கு அருள் செய்ய விரும்பி வந்தார்கள் என்று காட்டுவதற்காக.

இங்கே வந்து என்றது நல்லதும் தீயதும் நிறைந்து இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இந்த உலகத்தில் இருக்கும் நமக்காக அவர்கள் கீழிறங்கி வந்தார்கள் அவர்களின் கருணையால் என்று சொல்வதற்காக.

அடியவர்கள் குழுவுடன் இணைந்து காலத்தைப் போக்கினால் பந்த பாசங்கள் நீங்கும்; பந்த பாசங்கள் நீங்கினால் மயக்கம் தீரும்; மயக்கம் தீர்ந்தால் நிலை தடுமாறா மனநிலை கிடைக்கும்; அந்த மனநிலை கிடைத்தால் இங்கேயே விடுதலை கிடைக்கும்; என்று ஆன்றோர் சொன்ன நிலை கிடைக்கும் படி அடியவர் கூட்டத்தின் நடுவில் இருக்கப் பண்ணினாள்.

இதெல்லாம் அவள் திருவடிகளின் பெருமை. அம்மையப்பர்களின் பொற்றாமரைத் திருவடிகள் நம் சென்னியில் பதித்திடவே என்ன தவம் செய்தோமோ மனமே என்று வியக்கிறார்.

***

அந்தாதித் தொடை: முன் செய் புண்ணியமே என்று சென்ற பாடல் முடிந்தது. இந்தப் பாடல் புண்ணியம் செய்தனமே மனமே என்று தொடங்கி புண்ணியம் என்ற சொல்லைக் கொண்டு அந்தாதித் தொடையைத் தொடுக்கிறார். பதித்திடவே என்று இந்தப் பாடல் நிறைந்து அடுத்தப் பாடல் இடம் கொண்டு என்று தொடங்கி 'இடம்' என்ற சொல்லைக் கொண்டு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அணி நலம்:

புண்ணியம், கண்ணியும், நண்ணி, பண்ணி என்று நான்கு அடிகளிலும் எதுகையை அமைத்திருக்கிறார்.

புண்ணியம் - புது - பூங்குவளை, கண்ணி - கணவர் - காரணம், நண்ணி - நடு, பண்ணி - பத்ம - பாதம் - பதித்திடவே என்று நான்கு அடிகளிலும் மோனைச் சுவையைக் காட்டுகிறார்.

செய்தனமே மனமே என்ற இடத்தில் ஒன்று போல் ஒலிக்கும் சுவைநலத்தையும் காட்டுகிறார்.

Thursday, March 22, 2007

முன் செய் புண்ணியமே (பாடல் 40)




வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே

வாணுதற் கண்ணியை - ஒளி பொருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை,

விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை - விண்ணில் வாழும் தேவர்கள் யாவரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விருப்படும் எங்கள் தலைவியை,

பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை - ஒன்றுமறியா பேதை நெஞ்சில் காணுவதற்கு எளிதில்லாத கன்னியை

காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய்
புண்ணியமே - காணும் அன்பு கொள்ளவேண்டும் என்று எண்ணினேனே. அந்த எண்ணம் நான் முன்பு செய்த புண்ணியப் பயன் தானே.

அருஞ்சொற்பொருள்:

அண்ணியள் - அண்மையில் இருப்பவள்; எளிதானவள்

Saturday, March 17, 2007

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு (பாடல் 39)




ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே


ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு - என்னை ஆள்வதற்கு உந்தன் திருவடித்தாமரைகள் உண்டு

அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு - எமனிடமிருந்து மீள்வதற்கு உந்தன் கடைக்கண்ணின் கருணைப்பார்வை உண்டு

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையே; அது உன் குறை இல்லை

முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!


(கடைசி இரண்டு அடிகளுக்கு வேறு வகையிலும் பொருள் சொல்வதுண்டு.

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை நின் குறையே - இவை இருந்தும் உன் திருவடித்தாமரைகள் என்னை ஆளாமலும் உன் கடைக்கண் பார்வை என் மேல் விழாமலும் இருப்பதற்குக் காரணம் என் குறையாக இருக்கலாம்; ஆனால் அது உன் குறையும் கூட (ஏனெனில் நான் உன் பிள்ளை; உன் அடியவன்/அடியவள். என்னைக் காப்பது உன் கடன்)

அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே - முன்பு முப்புரங்கள் அழியும் படி அம்பு தொடுத்த வில்லை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே!
)

Tuesday, March 13, 2007

அவளைப் பணிமின் கண்டீர் (பாடல் 38)




பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் - பவளக் கொடியில் பழுத்த பவளம் போல் இருக்கும் செவ்விதழ்களும்

பனி முறுவல் தவளத் திருநகையும் - குளிர்ந்த முறுவலும் முத்து போன்ற பற்கள் தெரிய செய்யும் புன்னகையும்

துணையா - துணையாகக் கொண்டு

எங்கள் சங்கரனைத் - எங்கள் (தலைவனாம்) சங்கரனைத்

துவளப் பொருது - துவண்டு போகும்படி போரிட்டு

துடியிடை சாய்க்கும் - உடுக்கையைப் போன்ற இடையை கீழே சாய்க்கும்

துணை முலையாள் - ஒன்றிற்கு ஒன்று துணையான முலைகளை உடையவள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே - அவளைப் பணியுங்கள் தேவருலகாம் அமராவதியை ஆளுவதற்கு.

Saturday, March 03, 2007

திரு உடையானிடம் சேர்பவளே (பாடல் 37)



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே


கைக்கே அணிவது கன்னலும் பூவும் - கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது கரும்பும் பூக்களும்

கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை - தாமரை போன்ற திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது வெண்ணிற முத்துமாலைகள்

விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் - நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும் இடைக்கு அணிந்து கொள்வது பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும் பட்டுத்துணியும்

எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே - எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும் எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே.

Thursday, March 01, 2007

பொருளே பொருள் முடிக்கும் போகமே (பாடல் 36)




பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

பொருளே - பொருட்செல்வமாகித் திகழ்பவளே!

பொருள் முடிக்கும் போகமே - அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!

அரும் போகம் செய்யும் மருளே - அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!

மருளில் வரும் தெருளே - அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!

என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது - என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?

அறிகின்றிலேன் - சொல்லும் வழி அறியேன்.

அம்புயாதனத்து அம்பிகையே - தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே

***

பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது. அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை? மனத்தில் வஞ்சத்து இருள் கொண்டு இருந்த என்னிடம் அந்த இருள் நீங்கி ஒளி வெள்ளமாய்த் திகழும் படி செய்த அன்னையின் அருளையும் அந்த அருளின் பெருமையையும் சொல்லி முடியுமா?